Sunday, 6 July 2014

காரட்டின் மகத்துவம்



விலை உயர்ந்த வைரத்தின் தூய்மையைக் கணக்கிடும் போது கேரட் என்ற வார்த்தையை உபயோகிக்கிறோம். சாப்பிடுகிற கேரட்டுக்கும் இதற்கும்  எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும், வைரத்தைப் போல அத்தனை மேன்மையானது சாப்பிடுகிற கேரட். காய்கறிகளிலேயே மிகவும் உன்னதமான  ஒன்று கேரட். அத்தனை வைட்டமின்களையும் சத்துகளையும் தன்னகத்தே கொண்ட அற்புதம். மஞ்சள் நிற உணவுகளைத் தவறாமல் சேர்த்துக்  கொள்ள வேண்டும் என்கிறது உணவியல். அதில் நம்பர் ஒன் இடம் கேரட்டுக்கே. மஞ்சள் கலந்த அதன் ஆரஞ்சு நிறத்தில்தான் அடங்கியிருக்கிறது  கேரட்டின் மொத்த ஆரோக்கியமும்.

‘‘பார்க்கிறதுக்கு எத்தனை அழகானதோ, அதே அளவு ஆரோக்கியமானதும்
கூட. ரொம்பவே சுவையான ஒரு காய். குழந்தைகள் கூட பச்சையா சாப்பிட  விரும்புவாங்க. கூடியவரைக்கும் கேரட்டை பச்சையா சமையல்ல சேர்க்கிறது அதோட முழு சத்துகளையும் நமக்குக் கொடுக்கும். சமைக்கிறதால 20  முதல் 30 சதவிகித சத்துகளை இழக்க வேண்டி யிருக்கும்‘‘ என்கிற ஊட்டச்சத்து நிபுணர் பாமினி, கேரட்டின் பிளஸ், மைனஸ் பற்றித் தொடர்ந்து  பேசுகிறார்.‘‘ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் நிறைஞ்ச அற்புதமான ஒரு காய் கேரட். இதுல எக்கச்சக்கமான பீட்டா கரோட்டின் சத்து இருக்கு. அது  மட்டுமில்லை, இதய நோயாளிக்கு இதமானதும் கூட. இரும்புச் சத்து, மாவுச்சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ்னு ஆரோக்கியத்துக்கு  அவசியமான அத்தனை சத்துகளும் கேரட்ல இருக்கு. கேரட்ல புரதச் சத்து மட்டும் குறைவு.



 
அதனால கேரட்டை, புரதச் சத்து அதிகமுள்ள வேற உணவுகளோட சேர்த்து சமைக்கிறது மூலமா இதை ஈடுகட்டலாம். வேரில் காய்க்கிற காய்தான்.  ஆனாலும், வேர்ல விளைகிற மற்ற காய்கறிகளை சாப்பிடறதுல சொல்லப்படற ‘கண்டிஷன்ஸ் அப்ளை கேரட்டுக்கு கிடையாது.  கேரட்ல இனிப்புச்  சுவை அதிகமாச்சே... வேர் காய்கறியாச்சேங்கிற பயத்துல நீரிழிவு பாதிச்ச பலரும், அதைத் தவிர்க்கிறாங்க. ஆனா, நீரிழிவு உள்ளவங்களும் வாரத்துல  2 நாள் கேரட் சாப்பிடலாம். மத்தவங்க வாரத்துல 4 நாள் கேரட்டை சமையல்ல சேர்த்துக்கலாம்.
 
குறிப்பா கர்ப்பிணிகளும், தாய்ப்பால் கொடுக்கிற பெண்களும் இதை அவசியம் சாப்பிடணும். கேரட் நல்லதுங்கிறதால அதை தினமும் சர்க்கரையும்  நெய்யும் சேர்த்து அல்வா மாதிரி செய்து சாப்பிடறது தவறு. முளைகட்டின பயறுகளோட சேர்த்து சமைச்சு சாப்பிடறப்ப முழுமையான சத்தான உணவு  சாப்பிட்ட பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு கேரட்டை துருவி, சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்த்து அல்வா செய்து கொடுக்கலாம்.ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல... அழகுக்கும் உதவற தாவரம் கேரட். அதுல உள்ள வைட்ட மின் ஏ, எபிதீலியம்னு சொல்லக் கூடிய சருமத்  திசுக்களோட வளர்ச்சியைத் தூண்டி, சருமத்தை அழகா, ஆரோக்கியமா வைக்குது. சரும நிறமும் கூடுது’’ என எல்லோருக்கும் கேரட் சாப்பிடும்  ஆர்வத்தை அதிகரிக்கிறார் பாமினி.

எப்படி வாங்குவது?


உறுதியாக, நல்ல ஆரஞ்சு நிறத்தில் இருக்க வேண்டும்.  அதன் அடர் ஆரஞ்சு நிறமே அதில் அடங்கியிருக்கும் பீட்டா கரோட்டின் சத்தின் அளவுக்கான  அறிகுறி. வெடிப்புகள் விட்ட, உடைந்த கேரட்டுகளை வாங்க  வேண்டாம். கீரையுடன் கிடைத்தால் நல்லது. அந்தக் கீரையும் பச்சைப் பசேலென  ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். கீரை இல்லாத கேரட் என்றால், அதன் இரண்டு முனைகளையும் பாருங்கள். கருமை படர்ந்திருந்தாலோ, ரப்பர் மாதிரி  வளைந்தாலோ அது பழைய கேரட் என்று தெரிந்து கொள்ளலாம். சிறிய அல்லது மீடியம் அளவிலான கேரட்டுகளே சுலபமாக சமைக்க ஏற்றவை.

எப்படி பத்திரப்படுத்துவது?

கேரட்டை வாங்கியதும் கீரையுடன் இருந்தால் அதை வெட்டவும். கீரையை சூப், சாம்பார், கூட்டு என எதிலாவது சேர்த்துக் கொள்ளலாம். மேல்  நுனியை வெட்டிவிட்டு, ஃப்ரிட்ஜில் வைக்கவும். பபுள்வ்ரேப் பேப்பர் இருந்தால் அதனுள் வைத்து சுற்றி வைத்தால் 1 வாரம் வரை புதிது போலிருக்கும்.  ஸ்டோர் செய்த கேரட்டை ஒரு வாரத்துக்குள் உபயோகித்து விடுவதே சிறந்தது.

எப்படியெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம்?

தினசரி கேரட் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம். பச்சையாக மென்று தின்பது பற்களுக்கும் நல்லது. தினம் அப்படி சாப்பிட  முடியாதவர்களுக்கு சில டிப்ஸ்...

கேரட்டை ஜூஸாக செய்து கொள்ளுங்கள். தினமும் ஏதோ ஒரு ஜூஸ் குடிக்கிற பழக்கம் உள்ளவர்கள் என்றால், எந்த ஜூஸ் உடனும் சிறிது கேரட்  ஜூஸும் கலந்து குடிக்கலாம். கேரட்டை மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொண்டு, அதை பிரெட், சப்பாத்தி, தோசை மேல் தடவிக் குழந்தைகளுக்குக்  கொடுக்கலாம். கேரட்டை தீக்குச்சிகள் மாதிரி மெலிதாகவோ, வட்ட வில்லைகளாகவோ நறுக்கி, உப்பு, மிளகுத்தூள் தூவி உணவு இடைவேளைகளுக்கு  இடையில் கொறிக்கலாம்.

தினமும் குடியுங்கள் கேரட் ஜூஸ்!


கேரட்டை கழுவி, தோல் சீவாமல் அரைத்து, சர்க்கரை சேர்க்காமலும், வடிகட்டாமலும் அப்படியே குடிக்க வேண்டும். தினம் கேரட் ஜூஸ்  குடிப்பவர்களுக்கு....

ரத்த சோகை சரியாகி, ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். சுவாசப் பிரச்னை சீராகும். சளியும் தொண்டைக்கட்டும் குணமாவதுடன், ஆஸ்துமாவுக்கு  காரணமான தொற்றைத் தவிர்க்கும். கேரட்டுடன், கொஞ்சம் கொத்த மல்லியும் சேர்த்து அரைத்துக் குடித்தால், எப்பேர்பட்ட மலச்சிக்கலும் சரியாகும். கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் நாட்களிலும் கேரட் ஜூஸ் குடிப்பதால், உடலிலுள்ள அதிகப்படியான தண்ணீர் தேக்கம்  சரியாகி, உடல் லேசான  உணர்வு பெறும். கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் கேரட் ஜூஸ் குடிப்பதால், பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஆபத்துகூட குறையுமாம்.  குழந்தையின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோர், தினமும் கேரட் ஜூஸ் குடித்தால், அவர்களது இனப்பெருக்கத் திறனானது மேம்படும்.  புகைப்பிடிப்பவர்களும், புகைப்பிடிப்பவர்களுக்குப் பக்கத்திலேயே இருக்க வேண்டியவர்களும் தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம், புகையினால்  உண்டாகும் ஆபத்திலிருந்து ஓரளவு தப்பிக்கலாம்.


No comments:

Post a Comment